திண்டிவனம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி,பாமக சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கி பாமக தொண்டர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு காரணமாக பல மாவட்டங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பட்டாளி மக்கள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் இரயில் மறியலில் ஈடுப்பட்டனர். அதேபோல கரூரில் இருந்து சேலத்திற்கு சென்ற பயணிகள் ரயிலை மறித்து நாமக்கல் ரயில் நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி,பாமக சார்பில் திண்டிவனத்திலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாமகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஏறி அக்கட்சி தொண்டர் ஒருவர் முழக்கமிட்டபடியே போராட்டம் நடத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இதனால் போராட்டக்களத்தில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
Top Seithigal
Comments
Post a Comment