மருத்துவமனையில் ஸ்டிரெச்சர் தராததால் நோயாளி தாயை அவரது மகன் முதுகில் சுமந்து சென்ற சம்பவம் பிஹார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பிஹார் மாநிலம் புக்சார் மாவட்டம் சோஹானி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார்(35). இவர் தனது வயதான தாயை, மூச்சுத் திணறல் பிரச்சினைக்காக, புக்சார் மாவட்ட மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றார். அப்போது தாயைப் பரிசோதித்த டாக்டர், அவரை மாடியிலுள்ள தனது அறைக்கு அழைத்து வருமாறு விஜய்குமாரிடம் கூறினார்.
இதையடுத்து அங்கிருந்த நர்ஸ்களிடம் ஸ்டிரெச்சர் தருமாறு கேட்டார். ஆனால் அங்கிருந்த நர்ஸ் அதற்கு பதில் தரவில்லையாம்.
இந்த நிலையில் தாயை முதுகில் சுமந்து கொண்டு மாடிப்படியேறிச் சென்று டாக்டரிடம் காட்டியுள்ளார். பின்னர் அவரைப் பரிசோதித்த டாக்டர் உடனடியாக, அவரை பாட்னாவிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (பிஎம்சிஎச்) கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் ஆம்புலன்ஸையும் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்பாடு செய்யவில்லை.
இதையடுத்து அங்குள்ள தனது நண்பரும், சமூக ஆர்வலருமான ராம்ஜி யாதவைத் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய்குமார் கூறும்போது, “நான் பலமுறை எனக்கு உதவுமாறு மருத்துவமனை ஊழியர்களைக் கேட்டேன். அவர்கள் எனது கோரிக்கையை ஏற்கவே இல்லை. பின்னர் சமூக சேவகர் ராம்ஜி யாதவ் வந்ததும், ஆம்புலன்ஸை வரவழைத்து கொடுத்தார்கள். ஏழை மக்களுக்கு ஏற்படும் நிலைமை பரிதாபகரமானது” என்றார்.
மூதாட்டி படம் வைரல்
ஆம்புலன்ஸுக்காக நோயாளி தாயுடனும் தோளில் சிலிண்டருடன் மகன் காத்திருந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த மூதாட்டியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மருத்துவக் கல்லூரியில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக தாயுடன் வந்த மகன் ஒருவர் தனது தோளில் ஆக்ஸிஜன் சிலிண்டரை வைத்துள்ளார். அந்தத் தாய்க்கு முகத்தில் மாஸ்க் போடப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் வாயு செல்லும் குழாயும் அவரது மூக்கில் செருகப்பட்டுள்ளது. உடல் நலம் குன்றிய நிலையில் அவர்கள் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்கின்றனர்.
ஆனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவே இல்லை. இந்த நிலையில் இதைப் புகைப்படமெடுத்த சிலர் அதை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
Top Seithigal
Comments
Post a Comment