'2.0' வெளியீடு மீண்டும் தள்ளிப் போகிறது என்று தகவல் வெளியானதால், விநியோகஸ்தர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. தான் நினைத்தது போன்று கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஷங்கர்.
முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும், பிப்ரவரி மாத இறுதியில் '2.0' டீஸர் வெளியீட்டு விழாவை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், ஏப்ரல் வெளியீடும் சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு பாடலின் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கப்படாமலே இருக்கிறது. இதுவரை முடித்துள்ள காட்சிகள் அனைத்தையும் படத்தோடு இணைத்து DI பணிகள் உள்ளிட்டவற்றை முடிக்க காலதாமதமாகும். இதனால் தான் வெளியீட்டு தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது படக்குழு.
மேலும், '2.0' ஏப்ரல் வெளியீடு என்று கூறப்பட்டதால் பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் மே, ஜுன் என திட்டமிட்டு வருகிறார்கள். தற்போது, '2.0' வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டால், அந்த தேதியில் அறிவிக்கப்பட்ட பட வெளியீடு என்னவாகும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் '2.0' படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் குரல் கேட்க தொடங்கியுள்ளது.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 400 கோடி பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
Top Seithigal
Comments
Post a Comment